முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கால் விருதுநகர் மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின.

Update: 2020-07-06 02:27 GMT
சிவகாசி,

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இதனால் சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவப்பிரியர்கள் இறைச்சி கடைகளை தேடி அலைந்தனர். சிவகாசி நகரப்பகுதியிலும், அதையொட்டி உள்ள கிராமங்களிலும் இறைச்சிகடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சிவகாசி பகுதியில் இதுபோன்ற ஊரடங்கு ஒரு வாரத்திற்கு இருந்தால் மட்டுமே நகரபகுதியில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

முழு ஊரடங்கையொட்டி நேற்று முன்தினம் இரவே சில இறைச்சி கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சி வாங்கி சென்றனர். அதேபோல டாஸ்மாக் கடைகளிலும் நேற்று முன்தினம் மாலை மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

விருதுநகர்

அதேபோல விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வணிக நிறுவனங்கள், டீ கடைகள், இறைச்சி கடைகள், பெட்ரோல் பங்குகள், முழுமையாக மூடப்பட்டு இருந்தன. மருந்து கடைகள் மட்டும் செயல்பட்டன. பொதுமக்களும் இந்த ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததால் மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன. முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் முழு ஊரடங்கையொட்டி பால் மற்றும் மருத்துவமனைகளை தவிர அனைத்து கடைகள், தொழிற்சாலை, பெட்ரோல் பங்குகள், பூக்கடை, டீக்கடை, ஓட்டல்கள் என அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல வத்திராயிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்