முழு ஊரடங்கால் வீடுகளில் முடங்கிய மக்கள்: கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய சாலைகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்துள்ளது.
இதனிடையே ஜூலை மாதம் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பெங்களூர் சாலை, கே. தியேட்டர் சாலை உள்பட நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பால் விற்பனை கடைகள் மட்டும் திறந்திருந்தன. மேலும் மருத்துவமனைகள் இயங்கின.
சாலைகள் வெறிச்சோடியது
கிருஷ்ணகிரி நகரில் மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவே பொதுமக்கள் கடை வீதிகளுக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றார்கள்.
இதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், மத்திகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலம், பாகலூர், சூளகிரி, பேரிகை, காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், கல்லாவி, வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் உள்பட எந்த வாகனங்களும் இயங்கவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.