61 பேர் டிஸ்சார்ஜ் சேலத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,247 ஆக அதிகரிப்பு
சேலத்தில் நேற்று மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
சேலம்,
சேலத்தில் நேற்று மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,247 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று 61 பேர் குணமடைந்ததால், அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
50 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடு, வெளிமாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வருவதால் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 70 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சேலத்தில் நேற்று மேலும் 50 பேருக்கு கொரோனோ நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25 பேரும், ஆத்தூரில் 10 பேர், காடையாம்பட்டியில் ஒருவர், காரிப்பட்டியில் 2 பேர், பேளூரில் ஒருவர், சங்ககிரியில் ஒருவர், சேலம் புறநகர் பகுதியில் ஒருவர் என 41 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1,247 பேர்
இதுதவிர விழுப்புரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த ஒருவர், ஆந்திராவில் இருந்து வந்த 3 பேர், கர்நாடகத்தில் இருந்து வந்த 2 பேர், மும்பையில் இருந்து வந்த 2 பேர், கேரளாவில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 9 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் 41 பேரும், பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 9 பேர் என மொத்தம் 50 பேர் ஒரே நாளில் நோய்தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 1,247 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 400 பேர் குணமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அதேசமயம் அரசு ஆஸ்பத்திரியில் 842 பேர் தொடர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
61 பேர் டிஸ்சார்ஜ்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் நேற்று குணம் அடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களை ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன், மருத்துவமனை சூப்பிரண்டு தனபால், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். அதேபோல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 52 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆக மொத்தம் சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 61 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.