முழு ஊரடங்கு உத்தரவு அமல்: கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

கடலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2020-07-05 23:00 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.

முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் நோய் தொற்று குறைந்தபாடில்லை. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நேரத்தில் மருந்து, பால் விற்பனை கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

கடைகள் அடைப்பு

இதன்படி நேற்று முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. கடலூரில் முழு ஊரடங்கு உத்தரவையொட்டி மருந்து, பால் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட், கோ-ஆப்டெக்ஸ் எதிரே இயங்கி வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டன. இதேபோல் முதுநகரிலும் காய்கறி மார்க்கெட் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள மளிகை கடைகள், பல்பொருள் அங்காடி, ஓட்டல் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் அடைக்கப்பட்டன. இதேபோல் மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டிருந்தன.

கிருமிநாசினி தெளிப்பு

இதனால் சாலைகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதற்கிடையே நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி உத்தரவின்பேரில் நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் 45 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளித்தல், பிளச்சிங் பவுடர் போடுதல் போன்ற சுகாதார நடவடிக்கைகளை எடுத்தனர். பொது இடங்கள், போலீஸ் நிலையம், அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளித்தனர்.

இது தவிர நகராட்சி வாகனத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, உரிய ஆவணம் காண்பித்த பிறகே செல்ல அனுமதித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாதவர்களை திருப்பி அனுப்பினர்.

வெறிச்சோடியது

முழு ஊரடங்கால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பாரதிசாலை, லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் ரோடு, நெல்லிக்குப்பம் ரோடுகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

கடலூர் பஸ் நிலையத்தில் பஸ்கள் இயங்காததால், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்து வந்தது. ஆனால் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் பஸ் நிலையமும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பால், மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்