தூத்துக்குடியில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலி நெல்லையில் பாதிப்பு 1000-ஐ தாண்டியது

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலியானார். நெல்லையில் தொற்று பாதிப்பு 1000-ஐ தாண்டியது.;

Update:2020-07-06 04:00 IST
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலியானார். நெல்லையில் தொற்று பாதிப்பு 1000-ஐ தாண்டியது.

கொரோனா வைரஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கொரோனாவின் தாக்கமும் அதிகரித்து உள்ளது. இதனால் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து, காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

அதன்படி தூத்துக்குடியில் 6 இடங்களில் கொரோனா தொற்று பரிசோதனை முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்ட 7 பேர் ஏற்கனவே இறந்து உள்ளனர்.

முதியவர் பலி

இந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த 73 வயது முதியவர் காய்ச்சல், நெஞ்சு வலி, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் இறந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் தூத்துக்குடியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 41 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் தூத்துக்குடி திரேஸ்புரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அடங்குவர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,162 ஆக அதிகரித்து உள்ளது.

48 பேருக்கு தொற்று

நெல்லை மாவட்டத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகரில் பெரும்பாலானோர் உள்ளனர். பாளையங்கோட்டை தியாகராஜநகரில் கணவன்-மனைவி மற்றும் 10 மாத பெண் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர அம்பை 1, சேரன்மாதேவி 3, நாங்குநேரி 1 மற்றும் களக்காடு, மானூர், பாளையங்கோட்டை ஊரக பகுதி, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

1,000-ஐ தாண்டியது

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 982 பேருக்கு கொரோனா பரவி இருந்தது. நேற்று 48 பேருடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,030 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 671 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 9 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டனர். மீதி 350 பேர் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி

இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை தென்காசி மாவட்டத்தில் 408 பேருக்கு கொரோனா பரவி இருந்தது. நேற்றுடன் சேர்த்து மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 448 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 207 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 240 பேர் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் மட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஏற்கனவே இறந்து உள்ளார்.

மேலும் செய்திகள்