ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி இல்லாததால் நாள் முழுக்க ஆம்புலன்சில் தவித்த கொரோனா நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி இல்லாததால் நாள் முழுக்க கொரோனா நோயாளி ஆம்புலன்சில் வைக்கப்பட்டு இருந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

Update: 2020-07-04 22:18 GMT
மும்பை,

ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி இல்லாததால் நாள் முழுக்க கொரோனா நோயாளி ஆம்புலன்சில் வைக்கப்பட்டு இருந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆம்புலன்சில் நோயாளி

நவிமும்பையை சேர்ந்த 64 வயது முதியவருக்கு கடந்த மாதம் 20-ந் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் குடும்பத்தினரால் வாஷியில் உள்ள மாநகராட்சி கொரோனா ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைவசதி இல்லை என கூறப்படுகிறது. எனவே முதியவரை வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல அங்கு இருந்த டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து முதியவரின் குடும்பத்தினர் அவரை நவிமும்பையில் உள்ள வெவ்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால் படுக்கை வசதி எங்கும் இல்லாததால் அவர் நாள் முழுக்க ஆம்புலன்சிலேயே தவித்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஆக்சிஜன் ஆம்புலன்ஸ்

இதுகுறித்து அவரது மகன் கூறியதாவது:-

எனது தந்தைக்கு மூச்சு திணறல், இருமல் ஏற்பட்டவுடன் வாஷி மாநகராட்சி கொரோனா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை இல்லை. அவர்கள் என்னை வேறு ஆஸ்பத்திரிக்கு தந்தையை அழைத்து செல்லுமாறு கூறினர். பிறகு நான் ஆஸ்பத்திரிகளை தேடி அலைந்தேன். ஆஸ்பத்திரிகள் எனது தந்தையை அனுமதிக்க மறுத்ததால் நான் மாரடைப்பு ஏற்பட்டவர்களை அழைத்து செல்ல பயன்படுத்தப்படும் ஆம்புலன்சை ஏற்பாடு செய்தேன். அதில் ஆக்சிஜன் வசதி இருக்கும் என்பதால் அதில் தந்தையை வைத்தோம்.

ரூ.32 ஆயிரம் ஊசி

இந்தநிலையில் மறுநாள் கோபர்கிரனேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர்கள் எனது தந்தையின் உயிரை காப்பாற்ற ரூ.32 ஆயிரத்துக்கு ஊசி போட வேண்டும் என கூறினர். அவ்வளவு பணம் இல்லாததால் நவிமும்பை மாநகராட்சியை அணுகினோம். ஆனால் அவர்கள் உதவ முடியாது என கூறிவிட்டனர்.

இந்தநிலையில் 4 நாட்களுக்கு பிறகு எனது தந்தை இறந்துவிட்டார். உயிரிழந்த 3 மணி நேரத்துக்கு பிறகு தந்தை உடல்வந்தது. ஆனால் உடலை கொண்டு வர ஊழியர்கள் இல்லை. எனவே நானும், எனது மைத்துனரும் பாதுகாப்பு உடையணிந்து உடலை எடுத்து சென்று இறுதி சடங்கு செய்தோம். இது துரதிருஷ்டவசமான சம்பவம். நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். எங்களின் நிலத்தில் தான் இந்த நகரமே உள்ளது. நான் முறையாக வரி செலுத்துகிறேன். ஆனால் நவிமும்பை மாநகராட்சி எனது தந்தையின் உயிரை காப்பாற்ற ஒரு ஊசி மருந்தை தர மறுத்துவிட்டது. என்னைப்போல வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் இதை வெளிப்படுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

---

கிங்சர்க்கிளில்
14 அடி உயர விநாயகர் சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும்
முதல்-மந்திரிக்கு ஜி.எஸ்.பி. மண்டல் கடிதம்
மும்பை,ஜூலை.5-

கிங்சர்க்கிளில் 14 அடி உயர விநாயகர் சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.பி. மண்டல் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி

மராட்டியத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாடவும், விநாயகர் சிலைகளை 4 அடி உயரத்திற்கு மேல் பிரதிஷ்டை செய்ய வேண்டாம் எனவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில், மும்பையின் பிரசித்தி பெற்ற மண்டலான லால்பாக் ராஜா விநாயகர் மண்டல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. மும்பையின் பணக்கார கணபதி என போற்றப்படும் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யும் கிங்சர்க்கிள் ஜி.எஸ்.பி. மண்டல் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதத்துக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை தள்ளி வைத்து உள்ளது.

14 அடி உயர சிலை

விநாயகர் சதுர்த்தியின் போது, இந்த மண்டல் சார்பில் பாரம்பரியமாக 14 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். மேலும் சுமார் 90 கிலோ தங்கம், வெள்ளி, வைரத்தால் அலங்கரிக்கப்பட்டு அந்த விநாயகர் சிலை ஜொலிக்கும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள ஜி.எஸ்.பி. மண்டல் விநாயகர் சதுர்த்தியின் போது, 14 அடி உயரத்தில் சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என அந்த மண்டல் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளது. இது குறித்து அந்த மண்டலின் அறங்காவலர் ஆர்.ஜி.பட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு விதிமுறைப்படி 4 அடி உயரத்திற்குள் விநாயகர் சிலையை அமைக்கும் பட்சத்தில் பாரம்பரியமாக பெரிய சிலைக்கு அணிவிக்கும் தங்கம், வெள்ளி நகைகளை சிறிய சிலைக்கு அணிவிக்க முடியாது. தூய களிமண்ணால் விநாயகர் சிலையை செய்யப்படும். அந்த சிலை செயற்கை குளத்தில் கரைக்கப்படும். பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டோம். ஆன்லைன் மூலம் தான் தரிசனம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்