அதிகபட்சமாக கார்கலாவில் 123 மில்லி மீட்டர் பதிவு: கர்நாடக கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை
கர்நாடக கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மங்களூரு,
கர்நாடக கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்சமாக உடுப்பி மாவட்டம் கார்கலாவில் 123 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ஆரஞ்சு அலர்ட்
கர்நாடகத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பெய்யும். குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவில் கனமழை கொட்டும். இந்த நிலையில் இந்த ஆண்டும் வழக்கம்போல கர்நாடகத்தில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
ஆனால் இந்த ஆண்டு கர்நாடக கடலோர மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு முதல் வாரத்தில் மழை இல்லை. 2-வது வாரத்தில் தொடர்ந்து 6 நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பின்னர் கடலோர மாவட்டங்களில் மழை எதுவும் பெய்யவில்லை. இருப்பினும் மழைக்கு வாய்ப்பு இருந்ததால் அந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
கொட்டி தீர்த்த கனமழை
இந்த நிலையில் நேற்று முன்தினத்தில் இருந்து கடலோர மாவட்டங்களில் மீண்டும் பருவமழை வேகமெடுத்தது. நேற்று முன்தினம் மதியம் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் பெய்தது. மழை இரவு முழுவதும் விடாமல் நேற்று காலை வரை கொட்டி தீர்த்தது. காலையில் சிறிது நேரம் ஓய்ந்த மழை பின்னர் மீண்டும் பெய்ய ஆரம்பித்தது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூரு, பண்ட்வால், புத்தூர், சுள்ளியா, பெல்தங்கடி, உப்பினங்கடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்து வந்த மக்கள் கடும் அவதி அடைந்தனர். பல்வேறு இடங்களில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மங்களூருவில் 118 மில்லி மீட்டர் மழையும், பெல்தங்கடியில் 93.6 மி.மீ மழையும், புத்தூரில் 82.4 மி.மீ மழையும், பண்ட்வாலில் 16.4 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது. கனமழையால் மங்களூருவில் ஓடும் நேத்ராவதி, குமாரதாரா, பல்குனி, நந்தினி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
123 மில்லி மீட்டர்
இதுபோல உடுப்பியிலும் நேற்று முன்தினம் மதியம் ஆரம்பித்த மழை நேற்று இரவு வரை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. உடுப்பி, குந்தாப்புரா, கொல்லூர், கார்கலா, பிரம்மாவர், பைந்தூர், காபு ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகள் மழைநீர் மூழ்கின. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் உடுப்பியில் ஓடும் சீதா, சவுபர்ணிகா, வராகி ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
நேற்று காலை நிலவரப்படி உடுப்பியில் 93 மி.மீ மழையும், குந்தாப்புராவில் 62 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக கார்கலாவில் 123 மி.மீ மழை பதிவாகி இருந்தது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதுபோல இன்னொரு கடலோர மாவட்டமான உத்தர கன்னடாவில் கார்வார், பட்கல், குமட்டா, எல்லாப்புரா பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது.
இதனால் அந்த மாவட்டத்தில் ஓடும் காளி உள்ளிட்ட சில ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த 3 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கனமழையால் கடலோர மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.