சிறுமுகை வனப்பகுதியில் உடல் சோர்வுடன் படுத்திருந்த யானை சிகிச்சை பலனின்றி சாவு

சிறுமுகை வனப்பகுதியில் உடல் சோர்வுடன் படுத்திருந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி இறந்தது.

Update: 2020-07-03 22:52 GMT
மேட்டுப்பாளையம், 

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட சிறுமுகை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி வனச்சரக அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் பெத்திக்குட்டை புதுக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 8 வயதான ஆண் யானை உடல் சோர்வுடன் படுத்து இருந்தது. இதையடுத்து அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த யானை தூக்கி நிறுத்தப்பட்டதால், அது நடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்தனர். மறுநாள் அந்த யானை பெத்திக்குட்டை கருப்பராயன் கோவில் வனப்பகுதியில் படுத்திருந்ததை கண்டறிந்தனர்.

காட்டு யானைக்கு சிகிச்சை

தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ், உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், அரசு வன கால்நடை மருத்துவர் சுகுமார், கால்நடை மருத்துவர்கள் தியாகராஜன், சதீஷ்குமார், சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் அந்த யானைக்கு தர்பூசணி, வாழைப்பழம், வாழைத்தண்டு ஆகியவையும் கொடுக்கப்பட்டன. குளுக்கோஸ், வைட்டமின்கள், தாது சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், குடல்புழு நீக்க மருந்து ஆகியவை செலுத்தப்பட்டது.

பரிதாப சாவு

உயிருக்கு போராடிய யானையை காப்பாற்றுவதற்காக வனத்துறையினரும் மருத்துவக்குழுவினரும் போராடி வந்தனர். கடந்த 5 நாட்களாக யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதையடுத்து இறந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடற்கூறு பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அந்த காட்டு யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும். இறந்த யானையின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, அதன் உடல் ஊன் உண்ணிகளுக்காக விடப்பட்டது என்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை சிறுமுகை வனப்பகுதியில் 8 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் அஞ்சலி

சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து இறந்து வருவது அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதற்காக யானை உருவப்படம் அச்சடிக்கப்பட்ட பிளஸ்க் போர்டில் கண்ணீர் அஞ்சலி என்று எழுதப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், இனிமேல் இதுபோன்று வனப்பகுதியில் காட்டு யானைகள் சாகக்கூடாது என்று வன தேவதையை வேண்டிக்கொண்டனர்.

மேலும் செய்திகள்