5 முன்னணி மின்னணு வணிக நிறுவனங்கள் தமிழகம் வருவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி

5 முன்னணி மின்னணு வணிக நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

Update: 2020-07-03 23:30 GMT
கடலூர், 

5 முன்னணி மின்னணு வணிக நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

கடலூர் முதுநகர் செல்லாங்குப்பம் சி.கே. என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவ வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலையில் நேற்று அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறுகையில், ஏற்கனவே மாவட்டத்தில் 3 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைப்பதற்கான மையம் உள்ளது. தற்போது கூடுதலாக இந்த கல்லூரியை தேர்வு செய்துள்ளோம். இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் 40 படுக்கை வசதிகள் உள்ளது. தேவைப்பட்டால் 60 படுக்கையாக மாற்றிக்கொள்ளலாம் என்றார்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் 64 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. அவற்றில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருவோர் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் தங்கள் நலன்கருதியும், குடும்ப நலன் கருதியும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மருத்துவ ஆலோசனை

மாவட்டத்தில் இதுவரை 1,123 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கவனமுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனாவை தடுக்க அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சப்- கலெக்டர்கள் விசுமகாஜன், பிரவின்குமார், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒத்துழைப்பு தேவை

முன்னதாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 5 முன்னணி மின்னணு வணிக நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்தது பற்றி அமைச்சரிடம் நிருபர்கள் கேட்ட போது, மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், வசதிகள் அதிகமாக உள்ளது. முதல்-அமைச்சர் அந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது வழக்கமான ஒன்று தான். இருப்பினும் இந்த நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும் நமக்கு தேவை என்றார்.

மேலும் செய்திகள்