அம்பையில் மேலும் 7 பேருக்கு கொரோனா
அம்பையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
அம்பை,
அம்பையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
7 பேருக்கு பாதிப்பு
அம்பை, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அம்பை அரசு மருத்துவமனை செவிலியர்கள், தனியார் பல் மருத்துவர் மற்றும் அவர் தொடர்பில் உள்ளவர்கள், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதியில் தினமும் 7, 8 பேர் என கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவர்கள் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே தொற்றுக்கு ஆளான பல் டாக்டரின் தாயார், மருமகன், பெண் பணியாளர், டாக்டரிடம் சிகிச்சை பெற்றவர், அம்பை அரசு டாக்டரின் மகன் உள்பட என 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புதுமாப்பிள்ளை
இதற்கிடையே அம்பை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த வாலிபருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடத்த குடும்பத்தார் முடிவு செய்தனர். இதற்காக மணமகன், அவரது தந்தை, தாயார் உள்பட 4 பேர் பெங்களூருவில் இருந்து காரில் புறப்பட்டு வந்தனர். கங்கை கொண்டான் சோதனை சாவடியில் அவர்களுக்கு பரிசோதனைக்கு ரத்தம் எடுக்கப்பட்டு அம்பை அனுப்பி வைக்கப்பட்டனர். அங்குள்ள முருகன் கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேருக்கும் தொற்று உறுதியானது தெரிய வந்தது. இதையடுத்து வருவாய்துறை, நகராட்சி மற்றும் சுகாதார துறையினர் அவர்களை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.