நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க ஆர்வம் காட்டும் விவசாயிகள்

அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் முதலிடம் பிடிப்பது நாட்டுக்கோழிகளே.;

Update:2020-07-02 04:30 IST
பொங்கலூர்,

அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் முதலிடம் பிடிப்பது நாட்டுக்கோழிகளே. ஆடு, மீன், பிராய்லர் கோழி என அசைவ வகைகள் எத்தனை இருந்தாலும் நாட்டுக் கோழி இறைச்சியின் சுவையே தனிச்சுவை தான். அசைவப் பிரியர்களை சுண்டி இழுக்கும் தன்மை இந்த நாட்டுக் கோழி இறைச்சிக்கு எப்பொழுதும் உண்டு.

தேவை அதிகரிப்பு

எனவே இந்த நாட்டுக்கோழி இறைச்சிக்கு எப்போதும் தேவை அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதனை கருத்தில் கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்போது நாட்டுக்கோழி உற்பத்தியில் அதிக அக்கறை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி பிராய்லர் கறிக்கோழி உற்பத்தி செய்வதில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான பொங்கலூர், காமநாயக்கன்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பிராய்லர் கோழிகள் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே பிராய்லர் கறிக்கோழி உற்பத்தியில் இப்பகுதி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் தற்போது இப்பகுதி விவசாயிகள் பிராய்லர் கோழிக்கு மாற்றாக நாட்டுக்கோழி உற்பத்தியிலும் கவனம் செலுத்துகின்றனர்.

அதிக நஷ்டம்

ஆரம்ப காலகட்டங்களில் இப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பிராய்லர் கோழி பண்ணை அமைத்திருந்தனர். அதில் ஒரு சில பகுதிகளில் நிலவிய தட்பவெப்ப நிலை காரணமாக பிராய்லர் கோழி வளர்ப்பில் அதிக நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அத்தொழிலை கைவிட்ட விவசாயிகள் அதற்காக அமைத்த கட்டமைப்புகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு வைத்திருந்தனர்.

இருந்தாலும் அந்த கட்டமைப்புகளில் நாட்டுக்கோழிகள் வளர்த்துப் பார்க்கலாமே என்ற எண்ணத்தில் நாட்டுக் கோழிகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினார். அதில் போதிய வருவாய் கிடைக்க தொடங்கியதை தொடர்ந்து நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து அதில் நல்ல லாபம் கிடைத்தது.

நாட்டுக்கோழி குஞ்சுகள்

குறிப்பாக பொங்கலூர் அருகே அலகுமலை பகுதியில் இதற்காக பெரிய அளவிலான பண்ணை மற்றும் முட்டைகள் பொறிப்பதற்கான நவீன உபகரணங்களுடன் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் தற்போது இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள் வளர்ப்பதற்கான வாய்ப்புகள் வழங்கி வருகிறது. இங்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் பல்லடம், அய்யம்பாளையம், மங்கலம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

அந்த கோழிகளை முட்டைக்காக வளர்த்து, அங்கிருந்து பெறப்படும் நாட்டுக்கோழி முட்டைகள் இந்த நிறுவனத்தில் உள்ள இன்குபேட்டரில் 18 நாட்கள் 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் மற்றும் 70 டிகிரி செல்சியஸ் ஈரப்பதத்துடன் பாதுகாக்கப்படுகிறது. பின்னர் அந்த முட்டைகள் 3 நாட்கள் கேட்சர் என்கிற எந்திரத்தில் வைக்கப்பட்டு அதிலிருந்து நாட்டுக்கோழி குஞ்சுகள் பொறிக்க வைக்கப்படுகிறது. இவை மீண்டும் விவசாயிகளிடம் வழங்கப்பட்டு அவர்களது பண்ணையில் வளர்க்கப்படுகிறது.

அதிக லாபம்

3 மாதத்திலிருந்து 4 மாதங்களுக்குள் கோழிக்குஞ்சுகள் முறையாக பராமரிக்கப்பட்டு, வளர்ந்து இறைச்சிக்கு தயாராகின்றன. அவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து இறைச்சிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு குறைந்த நேர உடல் உழைப்பில் அதிக லாபம் கிடைக்கிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் நாட்டுக்கோழிபண்ணைகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்