கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு: சேலம் சின்னக்கடை வீதியில் வியாபாரிகள் சாலைமறியல்

சேலம் சின்னக்கடை வீதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள வியாபாரிகள் நேற்று திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2020-07-02 03:30 IST
சேலம், 

சேலம் சின்னக்கடை வீதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள வியாபாரிகள் நேற்று திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா

சேலம் மாநகர் பகுதியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுவதோடு அங்கு வெளியாட்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்த டிரைவர் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளி உள்பட 13 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை, காய்கறி மற்றும் பழக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் அடைக்குமாறு நேற்று மாநகராட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கடைகளை அடைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் பூபதிராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

சாலைமறியல்

இதனிடையே, மாநகராட்சி சார்பில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட சின்னக்கடை வீதியில் சில இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. அதற்கு அங்குள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகளை அகற்றி அப்புறப்படுத்தினர். மேலும், அவர்கள் சின்னக்கடைவீதியில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. வியாபாரிகளின் போராட்டம் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

அப்போது, நோய் பரவலின் வீரியத்தை கவனத்தில் கொண்டு சின்னக்கடை வீதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் கடைகளை ஒரு வாரத்திற்கு அடைக்க வேண்டும் என்றும், அதன்பிறகு தளர்வுகள் அறிவித்தவுடன் மீண்டும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், மாநகராட்சி மற்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் அனைவரும் கடைகளை பூட்டிவிட்டு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

வீடு தேடி...

இதனை தொடர்ந்து நோய் தொற்று ஏற்பட்ட இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வீடுதேடி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்