மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வடசென்னையில் களமிறக்கப்பட்ட கமாண்டோ படை வீரர்கள்

வடசென்னை பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கமாண்டோ படை வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2020-06-25 23:56 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை இன்று கொரோனாவின் தலைநகர் போல உருவெடுத்து வருகிறது. அந்தளவு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட 5 மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னையில் வடசென்னை பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும், அரசின் அறிவுரைகளை ஏற்காமல் அலட்சியமாக சுற்றி திரிவதுமே காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் ராயபுரம், திரு.வி.க.நகர், தண்டையார்ப்பேட்டை, எண்ணூர், புதுவண்ணாரப்பேட்டை, பெரம்பூர், திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிவதையும், முக கவசம் இல்லாமல் நடமாடுவதையும் அதிகமாக பார்க்கப்படுகிறது.


இதையடுத்து பாதிப்பு அதிகமுள்ள இடங்களை அதிக போலீசாரை கண்காணிப்பு பணியில் நியமித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதிகளவு போலீசார் வடசென்னை பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் முக்கிய அம்சமாக தமிழக அரசின் கமாண்டோ படையினரும் நேற்று களத்தில் இறக்கப்பட்டனர்.

அடையாறு மருதம் வளாகத்தில் இருந்து ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 30 பேர் உள்ளடங்கிய கமாண்டோ படையினர் வடசென்னை பகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளனர். இந்த கமாண்டோ படையினர் துணை கமிஷனர் சுப்புலட்சுமி மேற்பார்வையில் செயல்படுவார்கள். வடசென்னை பகுதியில் கமாண்டோ படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் இனி தேவையில்லாமல் சுற்றுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மிகச்சிறந்த நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

அதேவேளை கமாண்டோ படையினர் களமிறக்கப்பட்டுள்ளதால் சாலையில் தேவையில்லாமல் சுற்றுவோர் அடித்து விரட்டப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதனை போலீஸ் உயர் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், “மக்களை அச்சுறுத்துவதற்காக கமாண்டோ படையினர் வரவில்லை. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படையினர் வந்திருக்கிறார்கள். இவர்கள் வடசென்னை பகுதிகள் முழுவதும் வலம்வந்து அணிவகுப்பு நடத்தி கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். அதேவேளை கண்காணிப்பு பணிகளிலும் போலீசாருக்கு உதவிகரமாக இருப்பார்கள். வடசென்னை பகுதிக்கு கமாண்டோ படையினர் வருகை தந்திருப்பது எங்களுக்கு கூடுதல் பலமாக இருக்கிறது“, என்றனர்.

மேலும் செய்திகள்