கொரோனா பீதிக்கு மத்தியில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது

கொரோனா வேகமாக பரவி வரும் பீதிக்கு மத்தியில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. ராய்ச்சூரில் தேர்வு மையம் முன்பு கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால், பரபரப்பு நிலவியது.

Update: 2020-06-25 23:03 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் ஜூன் 25-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவித்தார். அதன் பிறகு மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

கர்நாடகத்தில் கொரோனா பீதிக்கு மத்தியில் கர்நாடக பள்ளி கல்வி தேர்வாணையம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 2,879 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 203 மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு மையங்களுக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பம் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டது. அனைவருக்கும் சானிடைசர் திரவம் வழங்கப்பட்டது. மாணவர்கள் அதை கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொண்டனர். அனைத்து மாணவர்களுமே முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.

பெரும்பாலான மாணவர்கள் தனிமனித விலகலை பின்பற்றினர். பட்டநாயக்கனஹள்ளி தேர்வு மையத்திற்கு வந்த ஒரு மாணவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. அவரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காமல் பெற்றோருடன் திருப்பி அனுப்பினர். அதேபோல் சில தேர்வு மையங்களில் வைரஸ் அறிகுறி இருந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

கொப்பலில் கொரோனா மருத்துவமனைக்கு அருகிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு தேர்வு எழுதிய சுமார் 300 மாணவர்கள் பீதியடைந்தனர். ராய்ச்சூரில் தேர்வு மையம் முன்பு, மாணவ-மாணவிகளின் பெற்றோர் அதிக எண்ணிக்கையில் கூடியிருந்தனர். இதை கண்ட போலீசார், அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அந்த மையத்தில் தெர்மல் ஸ்கேனர் கருவி, செயல்படவில்லை. இதனால் சுகாதார ஊழியர்கள் சற்று ஆதங்கம் அடைந்தனர். உடனடியாக புதிய கருவியை வரவழைத்து அதன் மூலம் மாணவர்களின் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது.

மேலும் ராய்ச்சூரில் நாகிரெட்டி(வயது57) என்ற ஆசிரியர் தனது 10-ம் வகுப்பு படிக்கும் மகனை தேர்வு மையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். அவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகனுக்கு படுகாயம் உண்டானது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தர கன்னடா மாவட்டத்தில் தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உடல் கவச உடையை அணிந்திருந்தனர்.

இது மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. ஏனென்றால் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள போராளிகளாக செயல்படும் போலீசார் இந்த கவச உடையை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் சில தேர்வு மையங்களுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்-மந்திரி எடியூரப்பா, 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், “மாணவர்கள் எந்தவித பயமும் இன்றி தேர்வு எழுத வேண்டும். கொரோனாவை தடுக்க அரசு விதித்துள்ள வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றி, முக்ககவசம் அணிய வேண்டும். தனிமனித விலகலை பின்பற்றுதல், சானிடைசர் திரவத்தை பயன்படுத்துதல் போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவில் நேற்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “10-ம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக செய்துள்ளோம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயப்பட தேவை இல்லை. சில தேர்வு மையங்களில் சிறிய அளவிலான குழப்பங்கள் தீர்க்கப்பட்டன என்றார்.

மேலும் செய்திகள்