பதஞ்சலி நிறுவன மருந்தை விற்பனைக்கு அனுமதிக்க மாட்டோம் -மராட்டிய அரசு அறிவிப்பு
கொரோனா சிகிச்சைக்கான பதஞ்சலி நிறுவன மருந்தை விற்பனைக்கு அனுமதிக்க மாட்டோம் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
மும்பை,
யோகா குரு பாபா ராம்தேவ், கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்தை ஹரித்வாரில் உள்ள தனது பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனமும், ஜெய்பூரை சேர்ந்த தனியார் தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனமும் கூட்டு முயற்சியில் கண்டுபிடித்ததாக அறிவித்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்தை சாப்பிட்டு 7 நாட்களில் குணமடையலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் பதஞ்சலி நிறுவன மருந்து தொடர்பான விளம்பரங்களை நிறுத்தி வைக்குமாறும், மருந்து தொடர்பான தகவல்களை வழங்குமாறும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா சிகிச்சை மருந்தை தங்களது மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்ததாக அறிவிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மருந்தை விற்பனைக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதிக்கவில்லை. அந்த மருந்து ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரிவித்து உள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் அல்லது இந்திய மருத்துவ அறிவியல் கழகம் அனுமதி அளிக்காத நிலையில் மருந்து தொடர்பான விளம்பரங்களுக்கு எதிராக பல்ேவறு மாநிலங்கள் புகார் தெரிவித்து உள்ளன. எனவே பதஞ்சலி நிறுவனத்தின் போலி மருந்தை மராட்டியத்தில் அனுமதிக்க மாட்டோம்.
கொரோனா நோயை குணப்படுத்தும் என்று கூறி அந்த நிறுவன மருந்தை மராட்டியத்தில் விற்பனை செய்ய முயற்சித்தாலோ அல்லது விளம்பரப்படுத்தினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு குற்ற வழக்கு பதிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.