மதுரைக்கு சென்று வந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்று - சமத்துவபுரத்தில் தடுப்புகள் அமைப்பு

மதுரைக்கு சென்று வந்த சமத்துவபுரம் தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Update: 2020-06-25 05:28 GMT
வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மண்மங்கலம் சமத்துவபுரத்தை சேர்ந்த 30 வயது கூலி தொழிலாளி ஒருவர் தனது மகளுடைய கண் அறுவை சிகிச்சைக்காக கடந்த 19-ந்தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து பஸ் மூலம் தந்தையும்-மகளும் கடந்த 22-ந்தேதி சொந்த ஊரான சமத்துவபுரத்திற்கு வந்து விட்டனர். இந்தநிலையில், தனக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக கூறிய கூலி தொழிலாளி சுகாதார நிலையத்திற்கு சென்று ரத்தம், சளி மாதிரிகளை கொடுத்து பரிசோதனை செய்து கொண்டார். இதில் தொழிலாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, தனிவார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து தொழிலாளியின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், மண்மங்கலம் சமத்துவபுரம் பகுதிக்குள் யாரும் நுழைந்து விடாதபடி மூங்கில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமத்துவபுரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் வீட்டை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும். அதை விட்டு, விட்டு சமத்துவபுரம் முழுவதையும் தனிமைப்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால் நாங்கள் யாரும் வெளியே செல்லமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளோம்.

வேலைக்கு சென்றால், எங்களை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறுகிறார்கள். இதனால் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை கழிவுகளை இப்பகுதியில் கொட்டுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சமத்துவபுரத்தை தூய்மைப்படுத்த வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்