திருமண மண்டபத்துக்கு ‘சீல்’ வைப்பு -சமூக இடைவெளியை பின்பற்றாததால் அதிகாரிகள் நடவடிக்கை
தூத்துக்குடி அருகே சமூக இடைவெளியை பின்பற்றாமல் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டதால், அந்த மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், திருமண விழாக்களில் குறைந்த அளவிலான உறவினர்களே கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலையில் திருமண விழா நடந்தது. இதில் மணமக்களின் உறவினர்கள் சுமார் 300 பேர் கலந்து கொண்டார்களாம். இதில் முறையான சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், திருமணத்திற்கு வந்தவர்கள் முக கவசம், கையுறை எதுவும் அணியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேபோன்று திருமண மண்டப வாசலில் கைகழுவும் திரவம், கிருமிநாசினி எதுவும் வைக்கவில்லை. திருமண விழாவில் பந்தியில் அமர்ந்து மக்கள் கூட்டமாக உணவு சாப்பிட்டனர். இதுகுறித்து அறிந்த தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
அதன்பேரில், தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் புதுக்கோட்டை போலீசார் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டதால், அந்த திருமண மண்டபத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.