சாத்தான்குளம் சம்பவத்துக்கு கண்டனம் விழுப்புரம் மாவட்டத்தில் செல்போன் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் செல்போன் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2020-06-24 22:15 GMT
விழுப்புரம், 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவரும், இவருடைய மகன் பென்னிக்சும் (31) அங்குள்ள மெயின் பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு தடையை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்து வந்ததால் அவர்கள் இருவரையும் சாத்தான்குளம் போலீசார், விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இருவரையும் போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஜெயராஜையும், பென்னிக்சையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு கடந்த 22-ந் தேதி இரவு பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், ஜெயராஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிச்சை பலனின்றி அன்று இரவே பென்னிக்சும், நேற்று முன்தினம் அதிகாலை அவரது தந்தை ஜெயராஜூம் இறந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இவர்களுடன் செல்போன் வியாபாரிகளும் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் செல்போன் வியாபாரிகள் அனைவரும் நேற்று தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் கடைகள் மூடிக்கிடந்தன.

மேலும் விழுப்புரத்தில் செல்போன் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செல்போன் வியாபாரிகள் சங்க தலைவர் முகமது ரபி தலைமை தாங்கினார். இதில் செல்போன் கடை வியாபாரிகள் பலர் கலந்துகொண்டு சாத்தான்குளம் போலீசாரை கண்டித்தும், அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்வதோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். முன்னதாக, இறந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் செஞ்சியில் நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் செஞ்சி நாடார் சங்கத்தை சேர்ந்தவர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக சங்க கூட்டம் நடைபெற்றது, இதில் உயிரிழந்த தந்தை, மகன் இருவருக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு சங்க தலைவர் தனிஸ்லாஸ் கோஸ்கோ நாடார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சேவியர், ஜேசுதுரை, தங்கப்பாண்டியன், பாத்திமா ஸ்டோர் ஜெரால்டு, அந்தோணி பாண்டி, ஞானதுரை, பிரான்சீஸ், சைமன்துரை, செல்வகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செஞ்சியில் நேற்று செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து செல்போன் கடைக்காரர்கள் ஊர்வலமாக சென்று, துணைதாசில்தார் வரலட்சுமியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

இதேபோல் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சாவுக்கு நீதி கேட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நேற்று கடை அடைப்பு நடைபெற்றது. இதில் மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இந்த கடை அடைப்பு போராட்டம் பகல் 12 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.

மூங்கில்துறைப்பட்டில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்