சொந்த ஊருக்கு செல்ல முடியாத ஏக்கம்: மார்த்தாண்டம் அருகே, பினாயில் குடித்துவிட்டு ஆற்றில் மூழ்கி பெண் சாவு

மார்த்தாண்டம் அருகே சொந்த ஊருக்கு செல்ல முடியாததால் பினாயில் குடித்து விட்டு ஆற்றில் மூழ்கி பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Update: 2020-06-24 06:37 GMT
குழித்துறை, 

கரூர் மாவட்டம் மொஞ்சனூர், பூண்டிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). இவர் கடந்த சில ஆண்டுகளாக மார்த்தாண்டம், வெட்டுமணி அருகே மாம்பள்ளிதோட்டம் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி இருந்து, பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார்.

கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பராமரிப்பதற்காக கார்த்திகேயன் கரூரில் இருந்து தனது தாயார் தமிழ்க்கொடியை (56) சில மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்தார். தமிழ்க்கொடிக்கு இங்குள்ள காலநிலை பிடிக்கவில்லை என்றும், தன்னை மீண்டும் கரூருக்கு அனுப்பி வைக்குமாறு மகனிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். ஆனால், ஊரடங்கு காரணமாக மீண்டும் கரூருக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, ஊரடங்கு முடிந்த பின்பு அனுப்பி வைப்பதாக கார்த்திகேயன் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை தமிழ்க்கொடி வீட்டின் பின்பக்கத்தில் உள்ள குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு நின்றவர்களிடம் கரூருக்கு செல்ல முடியவில்லையே என வருத்தத்துடன் கூறிவிட்டு ஆற்றில் ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றார். சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதைபார்த்து அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி பொதுமக்கள் உதவியுடன் தாயாரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். அப்போது தமிழ்க்கொடி இறந்த நிலையில் பிணமாக காணப்பட்டார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தமிழ்க்கொடி சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தில் பினாயில் குடித்துவிட்டு ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிணத்தை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்