இனிவரும் நாட்கள் தான் மிக முக்கியமான காலம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்திற்கு இனிவரும் நாட்கள் தான் மிக முக்கியமான காலமாகும். எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்திட வேண்டும் என்று அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-06-23 21:45 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுப்பது குறித்து அனைத்துதுறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் இதுநாள் வரை கொரோனா நோயால் 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 391 பேர் குணமடைந்துள்ளனர், 12 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்நோய் பரவலை தடுக்க ஒவ்வொரு நாளும் அதிதீவிரமான கட்டுப்பாடுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக விழுப்புரத்தில் இருந்து மதுரைக்கும், செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம் வழியாக திருச்சிக்கும் என 2 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ரெயில்கள் மூலம் தினமும் ஏராளமான பயணிகள் விழுப்புரம் வந்து செல்கின்றனர். அதுபோல் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து விழுப்புரத்திற்கும் பஸ்கள் இயக்கப்படுவதால் அதன் மூலமாகவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் மூலம் நோய் பரவக்கூடிய நிலை உள்ளதால் அவர்களை கண்காணிக்க தாசில்தார், சுகாதாரத்துறை அலுவலர், காவல்துறையினர் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தீவிரமாக கண்காணித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விழுப்புரம் நகரில் உள்ள 42 வார்டுகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது விழுப்புரத்தில் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கவனத்தில் கொண்டு நோய் தடுப்பு நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.

சேலத்தில் கிரிக்கெட் விளையாடிய 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே நமது மாவட்டத்தில் கிரிக்கெட், கபடி, கைப்பந்து போன்ற விளையாட்டுகள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். இதனையும் அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். காய்ச்சல், இருமல், மூச்சு திணறல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் இருப்பவர்களை கண்டறிந்து மீட்பது இந்த கண்காணிப்பு குழுக்களின் வேலை. அந்த பணியை எந்தவித தொய்வும் இன்றி செய்தால் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து எளிதில் காப்பாற்றி விடலாம். இதுபோன்ற அறிகுறிகளுடன் இருப்பவர்களை தூய்மை பணியாளர்கள் மூலமும் கண்டறிய செய்ய வேண்டும்.

அரசு மற்றும் தனியார் பஸ்களை பொறுத்தவரை 50 சதவீத பஸ்கள்தான் இயக்கப்பட வேண்டும். அதுவும் 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட வேண்டும். முக கவசம் அணியாமல் வரும் பயணிகளை பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம். பஸ்சில் அதிக பயணிகளை ஏற்றினாலும் சம்பந்தப்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக அவர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள்.

இனிவரும் நாட்கள்தான் நமக்கு மிக முக்கியமான காலம். எனவே நோய் தடுப்பு நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியோடு பணியாற்ற வேண்டும். மனசோர்வு அடையாதீர்கள். கொரோனா ஆரம்ப கால கட்டத்தில் எந்தளவிற்கு உற்சாகமாக பணியாற்றினோமோ அதே உற்சாகத்துடனும், அதிதீவிரமாகவும் பணியாற்றி நோய் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், நலப்பணிகள் இணை இயக்குனர் சண்முகக்கனி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்