நாகூர் அருகே, நடுரோட்டில், சுற்றி வளைத்து தொழிலாளி வெட்டிக்கொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நாகூர் அருகே நடுரோட்டில், சுற்றி வளைத்து தொழிலாளியை வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகூர்,
நாகை அருகே நரிமணம் விசி லட்சியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் என்கிற விஜயபாபு(வயது 42). இவரது மனைவி முத்துலட்சுமி(32). இவர்களுக்கு கயல்(3), வானதி(2) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நாகூர் அருகே உள்ள மேலவாஞ்சூர் கிழக்கு கடற்கரை சாலையில் செந்தில், பஞ்சர் ஒட்டும் கடை வைத்து இருந்தார். நேற்று காலை செந்தில், கடையை திறப்பதற்காக மோட்டார் சைக்கிளில் முட்டம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர், செந்தில் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அவர்கள் யார்? எதற்காக தனது மோட்டார் சைக்கிளை வழிமறிக்கிறார்கள் என்று செந்தில் சுதாரிப்பதற்குள் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், செந்திலை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினார்கள். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். நாகூர் அருகே பட்டப்பகலில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.