தாரமங்கலத்தில், மர குடோனில் பயங்கர தீ; ரூ.3 கோடி தேக்கு மரக்கட்டைகள் கருகின

தாரமங்கலத்தில் மர குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ரூ.3 கோடி மதிப்பிலான தேக்கு மரக்கட்டைகள் கருகின.;

Update: 2020-06-23 22:15 GMT
தாரமங்கலம், 

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 55). இவருக்கு தாரமங்கலம் - ஓமலூர் ரோட்டில் சொந்தமாக மர குடோனும், அதை ஒட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

இந்த நிலையில் மர குடோனில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ பயங்கரமாக கொழுந்து விட்டு எரிந்தது. இதைப் பார்த்து வணிக வளாகத்தில் டீக்கடை வைத்திருந்தவர், கண்ணனுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி விஜயகுமார் தலைமையில், துணை அதிகாரிகள் சிவகுமார், முருகேசன் ஆகியோர் மற்றும் சேலம், ஓமலூர், இரும்பாலை, நங்கவள்ளி, எடப்பாடி, மேட்டூர் தெர்மல் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 50 வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தாரமங்கலம் விரைந்தனர்.

பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு 8 லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அவர்கள் சுமார் 10 மணி நேரம் போராடி நேற்று மதியம் 1 மணியளவில் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னதாக அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

முன்னதாக மர குடோனை ஒட்டி இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு முதலில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. அங்கு தீ பரவி இருந்தால் பெருமளவில் சேதம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் விற்பனை நிலையம் தப்பியது. மர குடோன் அருகில் இருந்த வணிக வளாகத்தில் வங்கி, எல்.ஐ.சி. அலுவலகம், தனியார் தங்க நகை கடன் வழங்கும் அலுவலகம், மளிகை, ஆயில் கடைகள் செயல்படுகின்றன.

இந்த தீ பரவியதால் தனியார் வங்கியில் ஜெனரேட்டர், ஏ.சி. எந்திரம் மற்றும் சில ஆவணங்கள் எரிந்து நாசமாயின. மற்றவைகள் அதிர்ஷ்டவசமாக தப்பின. மர குடோனில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான பர்மா தேக்கு உள்ளிட்ட உயர் ரக தேக்கு மரக்கட்டைகள், எந்திரங்கள் தீயில் கருகி நாசமானதாக கூறப்படுகிறது.

மர குடோனில் எப்படி தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக அந்த பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களை போலீசார் கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்