சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில், 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் - சி.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. அறிக்கை
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து சி.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இதுகுறித்து சி.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. குறிப்பாக சாலை மேம்பாடு, குடிநீர் திட்டப்பணிகள், மேம்பாலம் கட்டுதல், குளங்கள் தூர்வாருதல், வாய்க்கால் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும். இந்த தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்க நாமக்கல் அல்லது இதர பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதை தவிர்க்கவும், மலைவாழ் மக்களுக்கு எளிதில் உயர்கல்வி வசதி கிடைக்கவும் பேளுக்குறிச்சி கணவாய்மேட்டில் ரூ.8 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அரசு கலைக்கல்லூரி கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.
சேந்தமங்கலம் தாலுகா உருவாக்கப்பட்டு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்திலேயே பெரிய ஏரியான தூசூர் ஏரி தூர்வாரும் பணிக்கு ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்பட்டு உள்ளது.
கொல்லிமலையில் ரூ.385 கோடியில் நீர்மின் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு சேரடி வழியாக ரூ.2½ கோடி செலவில் 3-வது மாற்றுவழி அமைக்கப்பட்டு வருகிறது. செங்கரையில் புதிதாக போலீஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
இதுதவிர எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் நபார்டு சாலை மேம்பாடு திட்டத்தில் ரூ.50 கோடியில் சாலை பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இதுதவிர தொகுதி முழுவதும் கிராமங்கள் தோறும் சாலை வசதி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுத்து உள்ளோம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.