பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 151 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 144 பேர் பெரம்பலூர், திருச்சி, சென்னை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 7 பேர் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா பென்னக்கோணம், வடக்கலூர், அத்தியூர், கீழப்பெரம்பலூர், கல்லை, பரவாய், பெருமத்தூர் குடிகாடு, வீ.கீரனூர், அசூர், ஆலத்தூர் தாலுகா கூடலூர், மேலமாத்தூர், வரிசைப்பட்டி, கொட்டரை, மேலஉசேன் நகரம், தெரணி, நாரணமங்கலம், பெரம்பலூர் நகரம் மற்றும் பெரம்பலூர் தாலுகா பாளையம், செல்லியம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள், 3-வயது பெண்குழந்தை மற்றும் 19 ஆண்கள் என மொத்தம் 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டனர்.
இதில் 18-க்கும் மேற்பட்டவர்கள் சென்னைக்கு சென்று வந்த வகையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர். மீதமுள்ள 6 பேர் பிறமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்றுவந்த வகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனை, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரியலூர் அரசு மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அரசு கலைக்கல்லூரி, பாடாலூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் 4 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் இந்த 24 பேருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், இதுவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 175-ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 24 பேரில் 12 பேர் விபரம், தமிழக அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்டு அறிக்கையில் வெளியானது. மீதமுள்ள 12 பேரின் விபரம் இன்றைய (புதன்கிழமை) பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட உள்ளதாக பொது சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.