காதல் மனைவியை மீட்டு தரக்கோரி கோவை வாலிபர் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

காதல் மனைவியை மீட்டு தரக்கோரி கோவை வாலிபர் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார்.

Update: 2020-06-23 22:30 GMT
துடியலூர், 

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் வித்யா காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 35). திருச்சி சஞ்சீவி நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது மகள் தமிழினி பிரபா (25). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து கோவையில் கடந்த 5-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை தமிழினி பிரபாவின் பெற்றோர் ஏற்கவில்லை. ஆனால் கார்த்திகேயனின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தாயாரை தாக்கிவிட்டு தமிழினி பிரபாவை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச்சென்றனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழினி பிரபாவை மீட்க திருச்சி சென்றனர். அப்போது என்னை யாரும் கடத்தவில்லை. எனது தந்தை உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ஊர் திரும்பி விடுவதாக தமிழினி பிரபா போலீசார் கூறினார்.

இதற்கிடையே கார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் எனது மனைவி கடத்தப்பட்டு உள்ளார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை ஆணவ படுகொலை செய்ய வாய்ப்புள்ளது. எனவே எனது மனைவியை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

இதுகுறித்து கார்த்திகேயன் கூறும்போது, தமிழினி பிரபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீடு புகுந்து எனது தாயை தாக்கிவிட்டு தமிழினி பிரபாவை இழுத்துச்சென்ற வீடியோ பதிவை துடியலூர் போலீசில் ஒப்படைத்து உள்ளேன். திருச்சிக்கு சென்ற போலீசார் எனது மனைவியை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி இருக்க வேண்டும். தமிழினி பிரபாவை மிரட்டி என்னை கடத்தவில்லை என்று கூற வைத்து உள்ளனர்.

எனக்கு 2010-ம் ஆண்டு முதல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவியை 2015-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டேன். எனது விவாகரத்து குறித்து தமிழினி பிரபாவிடம் ஏற்கனவே தெரிவித்து உள்ளேன் என்றார்.

மேலும் செய்திகள்