பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி தொகுப்பால் ஏழைகளுக்கு பயனில்லை - துணை முதல்-மந்திரி அஜித்பவார் சொல்கிறார்

பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு ஏழைகளுக்கு பெரியளவில் பயனளிக்கவில்லை என்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-23 23:26 GMT
மும்பை, 

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு தேசியவாத காங்கிரசின் வெல்பர் டிரஸ்ட் அமைப்பு தேவையான உதவிகளை செய்து வருகிறது. நேற்று இதுதொடர்பாக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு போதுமான உதவியாக நான் கருதவில்லை. இந்த தொகுப்பால் ஏழைகளுக்கு பெரியளவில் பயன் கிடைக்கவில்லை. தினக்கூலி பெறுபவர்களுக்கு இந்த தொகுப்பு உதவாது. பொருளாதாரம் இன்னும் வளர்ச்சி பாதைக்கு திரும்பவில்லை.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியுள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

கரீப் பருவத்தை கருத்தில் கொண்டு, பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய தகுதி பெற்றிருந்த விவசாயிகளுக்கு புதிய பயிர்க்கடன் கிடைப்பதை உறுதி செய்ய வங்கிகளுக்கு மாநில அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. வங்கிகளுக்கு மாநில அரசு ரூ.8 ஆயிரம் கோடியும், அதற்கான வட்டியும் தருவதாக தெரிவித்துள்ளது. இந்த உத்தரவாரம் காரணமாக கூட்டுறவு மற்றும் மாவட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்களை வழங்க தொடங்கி உள்ளன. மராட்டியத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், இறப்பு விகிதத்தை குறைக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா உயிரிழப்புகள் குறித்த விவரங்களை மாநகராட்சி மற்றும் மாநில அரசுக்கு தனியார் மருத்துவமனைகள் முறையாக தெரிவிக்காமல் இருக்கின்றன. இதனால் அரசால் கொரோனா இறப்பு விவரங்களை சரியாக தெரிவிக்க இயலவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்