தாராவியில் புதிதாக 5 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு

தாராவியில் புதிதாக 5 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-06-23 22:45 GMT
மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியும், தமிழர்கள் அதிகம் வசிக்கும்மும்பை தாராவியில் முதன் முதலாக கடந்த ஏப்ரல் 1-ந் தேதி கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். பாலிகா நகரை சேர்ந்த அவர் தொற்று நோய்க்கு பலியானார். இதைத்தொடர்ந்து அங்கு கொரோனா வைரஸ் காட்டு தீ போல பரவியது. 

குறிப்பாக ஏப்ரல் கடைசியில் நோய் தொற்று பரவல் உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது. மக்கள் நெருக்கடி மிகுந்த இந்த குடிசைப்பகுதியில்நோய் பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தது. இதனால் அங்கு வசித்த வெளிமாநிலத்தவர்கள் ஏராளமானோர் சாரை, சாரையாக சொந்த ஊருக்கு திரும்பினர்.

இந்த நிலையில்மே மாத இறுதியில் இருந்து இங்கு தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதில் நேற்று 5 பேருக்கு மட்டும் நோய் தொற்று கண்டறியப்பட்டு இருப்பது இங்கு வசிக்கும் பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவர், ‘‘தாராவியில் கொரோனா வேகமாக பரவியதை பார்த்து பயந்தேன். சொந்த ஊருக்கே போய்விடலாமா என நினைத்தேன். தற்போது இங்கு நோய் பாதிப்பு குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பையில் கொேரானா இல்லாத பகுதியாக தாராவி மாறி அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும்’’ என்றார்.

தாராவியில் நேற்று வரை 2 ஆயிரத்து 189 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 81 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 1,060 பேர் குணமடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்