நெல்லை அருகே பரபரப்பு: 1 வயது பெண் குழந்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை - தாய் உள்பட 6 பேர் கைது

நெல்லை அருகே 1½ வயது பெண் குழந்தையை விற்றதாக தாய் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-23 22:30 GMT
சேரன்மாதேவி, 

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வீரபுத்திரன் மகன் கணபதி (வயது 30). இவர் சென்னையில் தனியார் ஓட்டலில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி ரோஸ்லின். இந்த தம்பதிக்கு அபிஷா என்ற 1½ வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்த ரோஸ்லின் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள வீரவநல்லூரில் வசித்து வருகிறார்.

இதற்கிடையே, போதிய வருவாய் இல்லாததால் வறுமை காரணமாக ரோஸ்லின், தனது உறவினரான சேரன்மாதேவி முடுக்கு தெருவை சேர்ந்த நடராஜன் மகன் சுரேஷ் (30) என்பவர் மூலம் குழந்தையை விற்க முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் குமார் (39) என்பவரிடம் பாபநாசம் கோவில் அருகே வைத்து ரூ.50 ஆயிரத்திற்கு ரோஸ்லின் தனது குழந்தையை விற்றார். தொடர்ந்து வெவ்வேறு புரோக்கர்கள் கைக்கு சென்ற அந்த குழந்தை தற்போது மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தாஜூதீன் மனைவி பரக்கத் நிஷா (25) என்பவரிடம் வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரவநல்லூர் திரும்பிய கணபதி, தனது குழந்தை பற்றி ரோஸ்லினிடம் கேட்டுள்ளார். அதற்கு ரோஸ்லின், குழந்தையை யாரோ திருடிச் சென்று விட்டதாக கூறினார். இதை ஏற்க மறுத்த கணபதி இதுபற்றி போலீசில் புகார் கொடுக்குமாறு கூறினார். அதன்பேரில் வீரவநல்லூர் போலீசில் ரோஸ்லின் புகார் செய்தார்.

6 பேர் கைது

ஆனால், ரோஸ்லின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெற்ற குழந்தையை பணத்திற்காக விற்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்தார். பின்னர் இதுதொடர்பாக சேரன்மாதேவியை சேர்ந்த சுரேஷ், பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்த குமார், வெள்ளாங்குழியை சேர்ந்த சாமிநாதன் மனைவி மூக்கம்மாள் (40), விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த மரிய பாக்கியசாமி மகன் கண்ணன் (38), திருமங்கலத்தை சேர்ந்த பரக்கத் நிஷா மற்றும் குழந்தையின் தாய் ரோஸ்லின் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 3 பெண்களும் நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் ஜெயிலிலும், மற்றவர்கள் நாங்குநேரி ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடையோர் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்