கொரோனாவால் தி.மு.க. பிரமுகர் பாதிப்பு: பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற 48 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனாவால் தி.மு.க. பிரமுகர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற 48 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.;

Update:2020-06-24 04:00 IST
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூரை சேர்ந்தவர் குணசேகர் (வயது 50). தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர். இவர் கடந்த 14-ந்தேதி தனது பிறந்தநாள் விழாவை ஆரம்பாக்கம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட மாந்தோப்பு ஒன்றில் கொண்டாடினார். 

விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சென்னையை சேர்ந்த அவரது நண்பர்கள் என 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாடிய தி.மு.க. பிரமுகர் குணசேகர், விழாவில் பங்கேற்ற அவரது நண்பரான பாதிரிவேடு கிராமத்தை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க நபர் மற்றும் 50 வயது மதிக்கத்தக்க கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி என மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று கடந்த 21-ந்தேதி உறுதி செய்யப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்டனர்

இதனையடுத்து கொரோனா தொற்று பரவும் வகையில் ஊரடங்கை மீறியதாக தி.மு.க. பிரமுகர் குணசேகர் மீது ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 3 கார்கள், 5 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றினர்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர் விவரங்களை செல்போன் புகைப்படங்கள் மூலம் போலீசார் சேகரித்து வருகின்றனர். முதல் கட்டமாக 62 பேரின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 48 பேரை வட்டார மருத்துவர் கோவிந்தராஜ் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்