சென்னையில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் தீவிர கண்காணிப்பு - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் சென்னையில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் 485 களப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையில் உடல் வெப்பத்தை கண்டறியும் கருவி (தெர்மல் ஸ்கேனர்), ஆக்சிஜன் கண்டறியும் கருவி, கபசுரக் குடிநீர் பாக்கெட் போன்றவற்றை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
அதன் பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது,
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளது. அதில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 7 ஆயிரத்து 500 தெருக்களில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி தினந்தோறும் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரொனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல்,சளி உள்ளிட்டவைகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் 37 வருவாய் மாவட்டங்களிலுள்ள கலெக்டர்களுடன் தினந்தோறும் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது விதிக்கப்பட்டுள்ள முழுஊரடங்கானது நோய்த்தொற்று உள்ளவர்களையும், அவர்கள் தொடர்புகளையும் கண்டுபிடித்து அதை சரிசெய்ய உதவும் என கூறினார்.