சாத்தான்குளத்தில் தடையை மீறி கடை திறந்த விவகாரத்தில் கைது: சிறையில் அடைக்கப்பட்ட வியாபாரி-மகன் திடீர் சாவு
சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வியாபாரி-மகன் திடீரென உயிரிழந்தனர். போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளம்,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தனர்.
சம்பவத்தன்று இரவு இவர்கள் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், ஊரடங்கு தடையை மீறி கடையை நடத்தக்கூடாது என்றும், எனவே, கடையை அடைக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அதன்பேரில் அவர்கள் போலீஸ் நிலையம் சென்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இருவரையும் போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
திடீர் சாவு
நேற்று முன்தினம் இரவு சிறையில் இருந்த பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், ஜெயராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இரவிலேயே பென்னிக்ஸ் பரிதாபமாக இறந்தார். நேற்று அதிகாலையில் ஜெயராஜூம் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இறந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
சாலை மறியல்
போலீசார் தாக்கியதில் தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களுடைய உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது தாக்குதல் நடத்திய சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
கடைகள் அடைப்பு
மேலும், சாத்தான்குளம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. உடன்குடி, மெஞ்ஞானபுரம், பேய்குளம், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அங்கு பதற்றம் உருவானது.
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ஜோதிபாசு தலைமையில் அந்த கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், போலீசார் தாக்கியதால் தான் தந்தை-மகன் இறந்ததாகவும், எனவே, சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் உமாசங்கர், கட்டுமான தொழிலாளர் சங்க நகர செயலாளர் அந்தோணி செல்வம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆறுதல்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் வந்து ஆறுதல் கூறினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஜெயராஜின் மனைவி செல்வராணிக்கு ஆறுதல் கூறினார். மேலும் கனிமொழி எம்.பி. தொலைபேசி மூலம் செல்வராணியை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். சண்முகநாதன் எம்.எல்.ஏ., வசந்தகுமார் எம்.பி. உள்ளிட்டோரும் ஜெயராஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இறந்த ஜெயராஜூக்கு 3 மகள்கள், ஒரு மகன். அதில் 3 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. பென்னிக்ஸ் மட்டுமே ஆண் வாரிசு ஆவார். அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதற்குள் அவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவத்தால் சாத்தான்குளம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.