புதுவையில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 383 ஆனது

புதுவையில் மேலும் 17 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 383 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2020-06-23 04:23 GMT
புதுச்சேரி,

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி நேற்று மட்டும் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 11 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 6 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தவர்கள் 40 பேர் இதுவரை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 149 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

8 பேர் பலி

தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 168 பேர், ஜிப்மரில் 50 பேர், காரைக்காலில் 7 பேர், ஏனாமில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

புதுவையில் நேற்று 229 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது தெரியவந்தது.

புதிய கட்டுப்பாடுகள்

மாநிலம் முழுவதும் இதுவரை 12,781 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 12,231 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. 159 பேரின் பரிசோதனைகள் முடிவு வரவேண்டியுள்ளது.

புதுவையில் தொடர்ந்து நோய் பரவுதல் அதிகமாக இருப்பதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. 

மேலும் செய்திகள்