விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் 84 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-06-23 03:49 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 581 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள நிலையில் 383 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 186 பேர், அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 30 ஆண்கள், 11 பெண்கள் என 41 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் விழுப்புரம் காகுப்பம், மாம்பழப்பட்டு சாலை, திண்டிவனம், கண்டாச்சிபுரம், எறையானூர், எண்டியூர், முண்டியம்பாக்கம், மேல்மலையனூர், கொல்லியங்குணம், கிளியனூர், பெரம்பை, மரக்காணம், வெள்ளிமேடுபேட்டை, இருவேல்பட்டு, புதுப்பாளையம், வானூர், செல்லப்பிராட்டி, ஆனத்தூர், கரடிக்குப்பம், செம்மேடு, சத்திப்பட்டு, மடப்பட்டு, தடுத்தாட்கொண்டூர், மேலக்கொண்டூர், கடையம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 16 பேர் சென்னையிலிருந்தும், செங்கல்பட்டில் இருந்து ஒருவரும், பெங்களூருவில் இருந்து ஒருவரும் வந்தவர்கள். மற்றவர்களுக்கு சமூக தொற்றாக இந்நோய் பரவி உள்ளது.

606 ஆக உயர்ந்தது

இதையடுத்து அவர்கள் 41 பேரும் விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டத்தில் 581 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 16 பேர் சென்னை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் பெயர் விவரங்கள் நேற்று விழுப்புரம் மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு சென்னை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர்

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 792 ஆக இருந்தது. நேற்று பரிசோதனை முடிவுகள் வந்ததில், 29 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதில் சென்னையில் இருந்து கடலூருக்கு வந்த 12 பேர், அண்ணாகிராமம் வந்த 2 பேர், குறிஞ்சிப்பாடிக்கு வந்த ஒருவர், விருத்தாசலம் வந்த 3 பேர், பண்ருட்டி, மங்களூருக்கு வந்த 2 பேர், கம்மாபுரம் வந்த 3 பேர், குமராட்சிக்கு வந்த 2 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இது தவிர பெங்களூருவில் இருந்து கடலூர் வந்த ஒருவர், நுரையீரல் தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த செவிலியர் ஒருவர் என 29 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 821 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் 387 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்டோரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் அவர்களின் பெயர் பட்டியல் சென்னை கொரோனா பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 395 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்