பல பெண்களை சீரழித்த விவகாரம்: காசியின் வெளிநாட்டு நண்பரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை

பல பெண்களை ஏமாற்றிய காசியின் வெளிநாட்டு நண்பரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Update: 2020-06-22 08:04 GMT
நாகர்கோவில்,

சமூக வலைதளம் மூலம் பழகி ஆபாச படமெடுத்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக நாகர்கோவில் காசி மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு காசியின் மீதான விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறையில் இருந்த காசியையும், அவருடைய நண்பர் டேசன் ஜினோவையும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை வைத்தும் விசாரணை மேற்கொண்டனர்.

வெளிநாட்டில் உள்ள நண்பர் குறித்து காசி கூறிய தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கினர். தற்போது காசியின் வெளிநாட்டு நண்பர் அவருடைய உறவினர் என்பது தெரியவந்துள்ளது. காசி பெண்களுடன் நெருங்கி இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்புவதற்கு அவர் உதவியாக இருந்துள்ளார்.

காசியின் தொந்தரவு தாங்காமல் சில பெண்கள் அவரது செல்போன் எண்ணை முடக்கம் செய்தனர். இதனால் அந்த பெண்களுடன் காசி தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து காசி தனது உறவுக்கார நண்பரை தொடர்பு கொண்டு தன்னிடம் இருந்த பெண்களின் ஆபாச படங்களை அவரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்ப வைத்துள்ளார்.

பின்னர் காசி அந்த பெண்களிடம் மிரட்டும் தோரணையில் பேசி பெண்களை பணிய வைத்துள்ளார். எனவே வெளிநாட்டு நண்பர் சிக்கினால் இன்னும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே காசி பயன்படுத்திய சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் காசியுடன் தொடர்பில் இருந்த பெண்களை விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த சில பெண்கள் தங்களுக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், விசாரணைக்கு அழைத்தால் அவமானத்தில் தற்கொலை தான் செய்ய வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அந்த பெண்களிடம் பேசிய போலீசார், பெண்களின் நலனுக்காக தான் இந்த விசாரணை நடப்பதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் உரிய தண்டனை பெற்றுத் தர முடியும், மேலும் பெண்கள் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும் என்றும் கூறி அந்தப் பெண்களை ஆசுவாசப்படுத்தி உள்ளனர். எனினும் சம்பந்தப்பட்ட பெண்கள் விசாரணைக்கு வரவில்லை என தெரிகிறது.

மேலும் செய்திகள்