விருத்தாசலம் அருகேm, 2 வீடுகளில் ரூ.25 லட்சம் நகை-பணம் கொள்ளை - நள்ளிரவில் கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
விருத்தாசலம் அருகே அரசு ஊழியர் உள்பட 2 பேர் வீடுகளில் ரூ.25 லட்சம் நகை-பணம் கொள்ளைபோனது. நள்ளிரவில் கதவை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சின்ன பரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்சாமி மகன் பாலமுருகன்(வயது 40). இவருடைய உறவினர் தேவேந்திரன் மகன் ராஜீவ்காந்தி(36).
இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். ராஜீவ்காந்தி வடலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டின் பின்புறம் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலமுருகன், ராஜீவ்காந்தி ஆகியோரது குடும்பத்தினர், வீட்டின் முன்புறம் படுத்து தூங்கினர். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது, 2 வீடுகளின் பின்பக்க கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்த அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
பாலமுருகன் வீட்டில் இருந்த 50 பவுன் நகை, 5 ½ கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இதேபோல் ராஜீவ்காந்தி வீட்டில் இருந்த 16 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் காணவில்லை.
பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ரெயில்வே தண்டவாள பகுதியின் அருகில் நகைகள் வைத்திருந்த பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடந்தன. பாலமுருகன், ராஜீவ்காந்தி குடும்பத்தினர் தூங்கியதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் பின் பக்க கதவுகளை உடைத்து 2 வீடுகளில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்று நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் பெட்டிகளை அங்கேயே போட்டு விட்டுச்சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகை-பணத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டார். அப்போது கொள்ளையர்களை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீடுகளில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது வீடுகளை மோப்பம்பிடித்தபடி, வீட்டின் பின்புறம், ரெயில்வே தண்டவாளம் அருகில் உள்ள விவசாய நிலங்கள் ஆகிய பகுதிகள் வரை ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரசு ஊழியர் உள்பட 2 பேர் வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.