கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீர் திறப்பு: ஒரே தவணையில் பூண்டி ஏரிக்கு 8 டி.எம்.சி. தண்ணீர் வந்தது
ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீரானது தற்போது பூண்டி ஏரிக்கு ஒரே தவணையாக 8 டி.எம்.சி. தண்ணீராக வந்து சேர்ந்தது. இது தற்போது புதிய சாதனையாக பதிவாகியுள்ளது.
ஊத்துக்கோட்டை,
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்படி, அம்மாநில அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி, ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். இந்த நிலையில், கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லாத காரணத்தால், சென்ற ஆண்டில் கடந்த ஜூலை மாதம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
ஆனால் அதன் பின்னர் ஆந்திராவில் பலத்த மழை பெய்ததன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி அன்று பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட்டனர். இதற்கிடையே ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாநதி கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகளை சீர் செய்ய இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் 16ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பூண்டிக்கு 8 டி.எம்.சி. நீர்
இதற்கிடையே, செப்டம்பர் 25-ந் தேதி முதல் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி வரை கண்டலேறு அணையிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதில் 7.556 டிஎம்சி தண்ணீர் வந்து சேர்ந்தது. கிருஷ்ணாநதி கால்வாயில் உடைப்பு சீர் செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 25ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், செப்டம்பர் 25-ந் தேதி முதல் நேற்று காலை வரை பூண்டி ஏரிக்கு 8.040 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. அதாவது 1996-ம் ஆண்டு முதல் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் 2011ம் ஆண்டு அன்று ஜனவரி முதல் ஏப்ரல் வரை மற்றும் ஜூலை முதல் அக்டோபர் வரை 2 தவணைகளையும் சேர்த்து அதிகபட்சமாக 7.976 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது. இதுவரை அதுவே சாதனை அளவாக இருந்து வந்த நிலையில், இம்முறை ஒரே தவணையில் 8.040 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது புதிய சாதனையாக பதிவாகியுள்ளது.
குடிநீர் பிரச்சினை இல்லை
மேலும், சென்னையில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். ஆனால் இம்முறை கிருஷ்ணா நதிநீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், குடிநீர் பிரச்சினை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 20.63 அடியாக பதிவானது. ஏரிக்கு வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது.