திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு: 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கோழிகளை வாகனங்களில் கொண்டு வந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்ததால் அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Update: 2020-06-21 22:30 GMT
திருவள்ளூர், 

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 30-ந் தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் 32 சோதனை சாவடிகள் அமைத்து தேவையின்றி சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீசார் காமராஜர் சிலை, எம்.ஜி.ஆர். சிலை, காக்களூர் சாலை போன்ற பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

போலீசுடன் வாக்குவாதம்

அப்போது அந்த வழியாக ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை பிடித்து வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதில், ஒரு பெண் மோட்டார் சைக்கிளில் கோழிகளை கொண்டு வந்தார். இதைக்கண்ட போலீசார் அந்த பெண்ணின் மீது வழக்குப்பதிவு அவர் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த போலீஸ் வாகனம் முன்பு தனது கோழிகளை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் போலீசார், அந்த பெண்ணை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனிடையே திருவள்ளூர் டவுன் போலீசார் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்