நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர், போலீஸ்காரர் உள்பட 53 பேருக்கு கொரோனா
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர், போலீஸ்காரர் உள்பட 53 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்துக்கு வெளியூர்களில் இருந்து வந்தவர்களாலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 28 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 5 பேர் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து வந்தவர்கள். மீதம் 23 பேரில் நெல்லை மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் 10 பேர். இதில் நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது ரெட்டியார்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 3 பேருக்கும், டவுன் பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, பெருமாள்புரம், சாந்திநகர் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும் ஆக மொத்தம் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கிருமி நாசினி தெளிப்பு
மேலும் வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு, பாளையங்கோட்டை புறநகர், களக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு கம்பிகள் வைத்து அடைக்கப்பட்டன. நெல்லை சந்திப்பு பெருமாள் தெற்கு ரதவீதி, மேலப்பாளையம் ஹாமீன்புரம், முகமது அலி தெரு, டவுன் மாதா சன்னதி தெரு உள்ளிட்டவைகளும் அடைக்கப்பட்டன. அங்கு மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 428 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 208 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4 பேர் இறந்துள்ளனர்.
தென்காசியில் 23 பேர் பாதிப்பு
தென்காசி மாவட்டத்தில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர். மற்ற 22 பேரில் 3 பேர் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள், 2 பேர் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள். இதில் பாவூர்சத்திரத்தை சேர்ந்த 11 மாத குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த குழந்தையின் தாய் போலீசாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாப்பாங்குளம் அருகே உள்ள மலையான்குளம் பகுதியை சேர்ந்தவர்களுக்கும், பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 241 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 133 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாவூர்சத்திரம் பகுதிக்கு சென்னையில் இருந்து வருபவர்களால் தினமும் தொற்று அதிகரித்து வருவதால் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில், மருத்துவகுழுவினர், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்துக்கு தற்போது சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு அதிகளவில் தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 575 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மேலும் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொரோனா அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஒரு போலீஸ்காரருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர், வசித்து வந்த போலீஸ் குடியிருப்பு மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்த போலீஸ்காரருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.