போலீஸ்காரருக்கு தொற்று: 400 வீடுகளில் பொதுமக்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பரிசோதனை
விக்கிரமசிங்கபுரம் அருகே போலீஸ்காரருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள மேலக் கொட்டாரத்தில் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும் போலீஸ்காரர் வீடு உள்ள தெரு, சுகாதார பணியாளர்களால் தனிமைப்படுத்தப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பரிசோதனை
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா உத்தரவுப்படி சுகாதார ஆய்வாளர் கணேசன், சுகாதார மேற்பார்வையாளர் விநாயக மூர்த்தி ஆகியோர் தலைமையில் சுகாதார பணியாளர்கள் மேலக்கொட்டாரத்துக்கு சென்றனர்.
அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள பொதுமக்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தினர். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு ஓமியோபதி மாத்திரைகள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.