ஓய்வுபெற்ற ஆசிரியர் உள்பட 7 பேருக்கு கொரோனா: கோவில்பட்டியில் சுகாதார பணிகள் தீவிரம் - ஓட்டல்களில் சாப்பிட அனுமதி இல்லை
கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் உள்பட 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி,
சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிறவர்களால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவில்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் 33 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கோவில்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்த 30 வயதான வாலிபர், திண்டுக்கல்லில் வங்கி அதிகாரியாக பணியாற்றினார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். தொடர்ந்து அவருடைய மனைவி, பெற்றோர் மற்றும் துக்க வீட்டுக்கு வந்த உறவினர்களான காமநாயக்கன்பட்டி, இளையரசனேந்தலைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் வங்கி அதிகாரியின் உடலுக்கு அடக்க பிரார்த்தனை நடத்திய சீனிவாச நகரைச் சேர்ந்த 60 வயதான கிறிஸ்தவ ஆலய பங்குத்தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
சுகாதார பணிகள் தீவிரம்
மேலும் கோவில்பட்டி வள்ளுவர் தெருவைச் சேர்ந்த 59 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர், ஆழ்வார் தெருவைச் சேர்ந்த 48 வயதான நபர், சாலைப்புதூரைச் சேர்ந்த 40 வயது பெண், அவருடைய 15 வயது மகன் உள்ளிட்டவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்கள் வசித்த பகுதிகளை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி கிருமிநாசினி தெளித்தும், பிளச்சிங் பவுடர் தூவியும் வருகின்றனர். அங்கு வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தில், தலைவர் பழனிசெல்வம் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ், செயலாளர் பாபு, பொருளாளர் சுரேஷ்குமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் ஜவுளிக்கடை, நகைக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோவில்பட்டியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரையிலும் அனைத்து கடைகளும் அரசு விதிமுறைகளின்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். ஓட்டல்களில் சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் மட்டுமே இரவு 8 மணி வரையிலும் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.