பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - காரையும் கயிறு கட்டி இழுத்தனர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில், இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரையும் கயிறு கட்டி இழுத்தனர்.

Update: 2020-06-21 08:13 GMT
திருப்பூர், 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாட்களாக உயர்ந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலைஇல்லாமல் வீட்டில் முடங்கி, வாழ்க்கையை நகர்த்த முடியாத நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

எனவே ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தி மக்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு காருக்கு மாலை போட்டு, கயிற்றை கட்டி இழுத்துச்சென்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இனி காரை கயிற்றை கட்டி இழுத்துத்தான் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் நுதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோல் வெள்ளியங்காடு நால்ரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இருசக்கர வாகனத்தை பாடையில் ஏற்றி கொண்டு வந்தனர். கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரவி, ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேகர், 4-வது மண்டல செயலாளர் வடிவேல், நிர்வாகிகள் செந்தில்குமார், பஞ்சவர்ணம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் திருப்பூர் மாநகர் முழுவதும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் தலைமையில் 180 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 281 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பல்லடம் மாணிக்கபுரம் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியசெயலாளர் சாகுல்அமிது, ஒன்றிய துணை செயலாளர் மூர்த்தி, மற்றும் பரமசிவம், கணேஷ், ரங்கநாதன், சுப்பிரமணி, பிரகாஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் பல்லடம் அறிவொளி நகர், வடுகபாளையம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்