வெளியூர் வாகனங்களை கண்காணிக்க முள்ளூரில் சோதனைச்சாவடி - கோத்தகிரி தாசில்தார் தகவல்
வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க முள்ளூரில் சோதனைச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
கோத்தகிரி,
வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்களால் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கோத்தகிரி தாலுகாவில் இருந்து வெளியூர்களுக்கு அவசியமின்றி வாகனங்கள் சென்று வருவதாக புகார் எழுந்தது. இதையொட்டி வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள முள்ளூரில் சோதனைச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
கோத்தகிரியில் இருந்து வெளியூர்களுக்கு அவசிய தேவையின்றி வாகனங்கள் சென்று வருவதாக தெரிகிறது. இதை கண்காணிக்க முள்ளூரில் சோதனைச்சாவடி அமைக்கப்பட உள்ளது. அங்கு வருவாய், சுகாதாரம், காவல் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணி, உதவியாளர் அறிவாகரன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். வாகனங்களை சோதனை செய்ததோடு, அரசு பஸ்களில் வந்த பயணிகளிடம் உள்ளூர் அடையாள அட்டை உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.