வீட்டு தனிமையில் பெற்றோர் இருந்தால் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை - கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி

வீட்டு தனிமையில் பெற்றோர் இருந்தால், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை என்று கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.;

Update:2020-06-21 05:54 IST
பெங்களூரு, 

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு ஆங்கில பாடத்தேர்வு கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. இதில் பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மாணவி ஒருவர், தனது கையில் அச்சிடப்பட்டிருந்த வீட்டு தனிமை முத்திரையை அழித்துவிட்டு தேர்வுக்கு வந்ததாக செய்திகள் வெளியாயின. அந்த மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

அதனால் அந்த மாணவி அமர்ந்து தேர்வு எழுதிய அறையில் இருந்த மாணவிகள் யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. யாரையும் தனிமைப்படுத்தும் திட்டம் இல்லை. அந்த மாணவியின் தந்தை தனிமையில் உள்ளார். அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளது. அந்த மாணவி தனது கையில் இருந்த முத்திரையை அழித்துவிட்டு தேர்வு எழுத வந்ததாக ஊடகங்கள் செய்திகளை பரப்பின. இது மாணவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தகர்ப்பதாக இருந்தது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அந்த ஆங்கில தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சுமார் 6 லட்சம் மாணவ- மாணவிகள் பாதுகாப்பாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் தேர்வு எழுதியுள்ளனர். மாணவர்களின் உடல் நலனே கல்வித்துறையின் முக்கியத்துவமாக இருந்தது. தேர்வு எழுத வந்த அனைத்து மாணவர்களின் உடல் வெப்பநிலையும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதிக்கப்பட்டது. வருகிற 25-ந் தேதி எஸ்எஸ். எல்.சி. தேர்வு தொடங்குகிறது.

மாணவர்களின் பெற்றோர் வீட்டு தனிமையில் இருந்தால், அத்தகைய மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அத்தகைய மாணவர்களுக்கு அடுத்து வரும் நாட்களில் நடைபெறும் துணைத்தேர்வின்போது வாய்ப்பு வழங்கப்படும்.

2 முகக்கவசங்கள்

தேர்வு மையங்களில் 200 மாணவர்களுக்கு ஒரு சுகாதார குழு அமைத்து, அவர்களின் உடல்நிலை சோதிக்கப்படும். மாணவர்களுக்கு தலா 2 முகக்கவசங்கள் கல்வித்துறை சார்பில் வழங்கப்படுகின்றன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான நேரத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும். அனைவரும் சேர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இந்த சமுதாயத்திற்கு ஊடகங்கள் நேர்மறையான செய்திகளை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்