பெரம்பலூர் அருகே தாய், மகள் மர்ம சாவு - கொலையா? போலீசார் விசாரணை

பெரம்பலூர் அருகே தாயும், மகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-06-20 07:31 GMT
குன்னம், 

பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூர் கிராமம், இளங்கோ நகரை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மனைவி ராணி (வயது 60). தமிழரசு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ராணியின் மகள் ராஜேஸ்வரி (37). இவருக்கும் சங்கர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ராஜேஸ்வரிக்கு 9 வயதில் விஷால் என்ற மகன் உள்ளார். சங்கர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், ராஜேஸ்வரி தனது தாய் ராணி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், பீரோவில் இருந்த ராணியின் 4 பவுன் தாலி சங்கிலி மற்றும் குண்டு, காசுகளை தனது தாயாருக்கு தெரியாமல் ராஜேஸ்வரி எடுத்து சிறுவாச்சூர் வங்கியில் அடகு வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராணிக்கும், ராஜேஷ்வரிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்ட நிலையில் இருந்தது.

ராணியின் வீடு நேற்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராஜேஸ்வரி ஒரு அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

ராணி மொட்டை மாடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவர்கள் ராணியின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராஜேஸ்வரியின் உடலை எடுத்து சென்று அருகில் உள்ள சங்கரின் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைத்து இறுதி சடங்குகளை உறவினர்கள் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தாய்- மகள் சாவில் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் போலீசார் கூறுகையில், உயிரிழந்து கிடந்த தாய்-மகள் அருகே விஷ பாட்டில்கள் எதுவும் கிடக்கவில்லை. மேலும் ஒருவர் வீட்டின் உள்ளேயும், இன்னொருவர் மொட்டை மாடியிலும் இறந்து கிடந்துள்ளனர். மர்ம நபர்கள் யாரேனும் மொட்டை மாடி வழியாக வந்து அவர்களை கொலை செய்து விட்டு தப்பி சென்றுவிட்டனரா? என சந்தேகம் எழுந்துள்ளது. எதுவாக இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரிய வரும் என்றனர்.

மேலும் செய்திகள்