திருக்கனூர் பகுதியில், 26 பேருக்கு கொரோனா தொற்று - முககவசம் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றியவர்களால் பரவியது

திருக்கனூர் பகுதியில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-20 07:30 GMT
திருக்கனூர், 

புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் முககவசம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்த 5 பேருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கம்பெனியில் திருக்கனூர், கூனிச்சம்பட்டு, கே.ஆர்.பாளையம், கொடாத்தூர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வேலை செய்கின்றனர். அவர்கள் அனைவரையும் சுகாதாரத்துறையினர், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தினர். இதில் திருக்கனூர் புதுநகரை சேர்ந்த ஒரு பெண், கூனிச்சம்பட்டு காலனியை சேர்ந்த 3 பெண்கள், செட்டிப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 5 பேரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனியார் முககவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்தவர்களால் திருக்கனூர் பகுதியில் மேலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கூனிச்சம்பட்டில் 13 பேர், கூனிச்சம்பட்டு காலணியில் 3பேர் மண்ணாடிப்பட்டு காலணியில் 3 பேர் செல்லிப்பட்டில் 2 பேர், திருக்கனூர் புதுநகர், திருக்கனூர் காலனி, கைக்கிலப்பட்டு, சோரப்பட்டு, காட்டேரிக்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவரும் என மொத்தம் 26 பேர் கடந்த 3 நாட்களில் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் கைக்கிலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணியும் அடங்குவார். இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியபோது திருவண்ணாமலையில் இருந்து உறவினர்கள் பங்கேற்றதால், அவர்களில் யாருக்காவது தொற்று ஏற்பட்டு கர்ப்பிணிக்கு பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருக்கனூர் காலனியை சேர்ந்த நபர், திருக்கனூர் கடைவீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் மெக்கானிக்காக பணியாற்றினார். அவருக்கு ஷோரூமுக்கு வந்த வாடிக்கையாளர்கள் மூலம் தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ஷோரூம் நேற்று காலை மூடப்பட்டது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காட்டேரிக்குப்பத்தை சேர்ந்தவர் கடந்த சில மாதங்களுக்கு முன், வாகனத்தை ஏற்றி மனைவியே கணவரை கொலை செய்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டவர் ஆவார். வில்லியனூர் போலீசார் அவரை வழக்கு விசாரணைக்கு கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்தனர்.

அப்போது அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனால் அவரை பரிசோதனைக்கு அழைத்துச்சென்ற போலீஸ்காரர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் விசாரணைக்காக அவர் வில்லியனூர் போலீஸ் நிலையம் வந்ததால், போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். திருக்கனூர் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்