3 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகும் நாகை மீனவர்கள்
3 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல நாகை மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
நாகப்பட்டினம்,
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தடைக்காலத்துக்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி முதலே நாகை மாவட்ட மீனவர்களால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டு ஜூன் 1-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என அரசு அறிவித்தது. ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதால் மீன்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இல்லை என கூறி நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.
நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாறு, நாகூர் உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் விசைப்படகு மீன்பிடித்தொழிலில் சமூக இடைவெளியை பின்பற்ற வாய்ப்பு இல்லை. ஏற்றுமதி செய்வதற்கும் வாய்ப்பு இல்லை. எனவே மீன்களுக்கு உரிய விலை கிடைக்காது என்று கூறி ஊரடங்கு உத்தரவு முடியும் வரை விசைப்படகு மூலம் மீன்பிடிக்க செல்வதில்லை என முடிவு செய்து இருந்தனர்.
நாகை மாவட்ட மீனவர்கள் தவிர மற்ற மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலை தொடங்கினர். இந்த நிலையில் நாகையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து 3 மாதங்களுக்கு பிறகு நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு தயாராகி வருகிறார்கள். அக்கரைப்பேட்டை பகுதியில் மீன்பிடி படகுகளை சீரமைத்தல், பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல விசைப்படகுகளில் மீன்பிடி வலைகள், ஐஸ் கட்டி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றும் பணியும், டீசல் நிரப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டத்தில் 700 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரநாட்டார் கூறியதாவது:-
நாகையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மீன் கொள்முதல் செய்வதற்காக நாகை வரும் வியாபாரிகளின் போக்குவரத்துக்கு தடை செய்யக்கூடாது. அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை, சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம்களை அமைக்க வேண்டும்.
வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகளை மருத்துவ பரிசோதனை செய்த பிறகே துறைமுகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். இதில் சுகாதாரத்துறை முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் மீனவ பஞ்சாயத்தார்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.