கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து கூடுதல் சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் காணொலி காட்சி மூலம் ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து கூடுதல் சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் காணொலி காட்சி மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-06-20 06:01 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து கூடுதல் சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் காணொலி காட்சி மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், கலெக்டர் பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துசெல்வன், நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், ஓசூர் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சந்திரா ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பீலா ராஜேஷ் பேசியதாவது:-

கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வதோடு, தினமும் தூய்மை பணிகள் மேற்கொண்டு மருத்துவ குழுக்கள் மூலமாக ஆலோசனை வழங்க வேண்டும். மேலும், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களின் தொடர்பு எண்கள் மற்றும் விவரங்களை உடனடியாக கிராம அளவிலான குழுக்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சிவப்பு மண்டலங்களில் இருந்து வருபவர்களை 7 நாட்கள் முகாம்களில் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

பின்னர், தொற்று உள்ள நபர்களை கண்டறியும் பட்சத்தில், அவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்துதல் மற்றும் அவர்களை சார்ந்தவர்களை கண்டறிந்து, வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொண்டு, அவர்கள் வெளியில் வராத வகையில் கண்காணிக்க வேண்டும். மேலும், வயதானவர்கள், ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதலை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து அலுவலகங்களின் முகப்பு பகுதியில் தண்ணீர் வசதியுடன், கை கழுவும் உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கிராமம் தோறும் செவிலியர்கள், சுகாதாரத்துறை களப்பணியாளர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்கி, அப்பகுதி மக்களுக்கு அவ்வப்போது ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்