கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை விவரங்கள் மறைக்கப்பட்டதா? - மும்பை மாநகராட்சி மறுப்பு
மும்பையில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை விவரங்கள் மறைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மாநகராட்சி மறுத்துள்ளது.
மும்பை,
கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பையில் அந்த நோயால் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை தெரிவிக்காமல் மாநில அரசு மறைத்து வருவதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில தினங்களுக்கு முன் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, மாநில தலைமை செயலாளர் அஜாய் மேத்தா, மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த 1,328 பேரின் மரணங்கள் அறிவிக்கப்படவில்லை எனவும், இவர்களில் 862 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார். இது சரி செய்யப்பட்டு இறப்பு புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனால் மும்பை மாநகராட்சியும் கொரோனா உயிரிழப்புகளை மறைத்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆனால் இதை மாநகராட்சி மறுத்து உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகராட்சி விளக்கம்
மாநகராட்சி மட்டத்தில் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டதாக கூறப்படும் பேச்சுக்கே இடமில்லை. மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு வழங்கும் அறிவுறுத்தல்கள் மூலம் அனைத்து கொரோனா இறப்பு தகவல்களையும் சேகரித்து தீவிரமாக பின்பற்றி வருகிறது. மும்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 6-ந் தேதி கொரோனாவால் 17 மரணங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதில் அன்றைய தினம் அந்த ஆஸ்பத்திரியில் ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு உயிரிழந்து இருந்ததும், அதற்கு முன் இறந்த 16 பேரின் விவரங்களை முன்னரே தெரிவிக்காமல் 6-ந் தேதி மொத்தமாக தெரிவித்து இருந்ததும் கண்டறியப்பட்டது. அதன்பிறகு கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை 48 மணி நேரத்திற்குள் மாநகராட்சியின் தொற்றுநோய் பிரிவுக்கு தெரிவிக்கும்படி மும்பையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் கடந்த 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மட்டும் கொரோனாவால் 862 உயிரிழப்புகளை மருத்துவமனைகள் பதிவு செய்தன. இதுபற்றி உடனடியாக மாநகராட்சி மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.