வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கு 2-வது கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் - பூங்கோதை எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கு 2-வது கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று பூங்கோதை எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
நெல்லை,
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை, நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு அதாவது நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு வந்தவர்களுக்கு 2-வது கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
பின்னர் பூங்கோதை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ‘வெளிமாநிலம், சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வந்தவர்களுக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். சென்னை, வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு தொற்று இல்லை என்று கூறி அவர்களை ஊருக்கு அனுப்புவதால் அந்த ஊரில் உள்ள மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
அவர்களை முகாம்களில் 14 நாட்கள் தங்கவைத்துவிட்டு, அதன்பிறகு 2-வது முறையாக பரிசோதனை செய்து விட்டு ஊருக்கு அனுப்ப வேண்டும். சென்னையில் இருந்து இங்கு வருவதற்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது. அப்படி அனுமதிப்பதால் தான் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. எம்.எல்.ஏ.க்களை அழைத்து கலெக்டர் பேச வேண்டும்‘ என்றார்.