விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனாவுக்கு பிளம்பர் சாவு - பாதிப்பு எண்ணிக்கை 500-ஐ தாண்டியது
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பிளம்பர் இறந்தார். மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் நோயால் 478 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 371 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 100 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி ஒருவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அதன் விவரம் வருமாறு:-
விழுப்புரம் அருகே உள்ள அரியலூர்திருக்கை மேட்டுத்தெருவை சேர்ந்த 35 வயதுடைய வாலிபர், சென்னையில் பிளம்பராக வேலை செய்து வந்தார். கடந்த சில வாரத்திற்கு முன்பு அவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் அவருக்கு 3 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகிய தொந்தரவுகள் ஏற்பட்டதால் அவரை கடந்த 11-ந் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு உமிழ்நீர் பரிசோதனை எடுக்கப்பட்டது.
இதன் மருத்துவ பரிசோதனை முடிவு மறுநாள் (12-ந் தேதி) வந்தது. அதில் பிளம்பருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1.15 மணியளவில் இறந்தார்.
இதையடுத்து அவரது உடலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் பாதுகாப்பாக எடுத்து வந்து விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள தகன மேடையில் எரியூட்டினர்.
மேலும் இறந்த பிளம்பருடன் யார், யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளனர் என்ற விவரங்களை சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது அரியலூர் திருக்கையை சேர்ந்த பிளம்பர், கொரோனாவால் இறந்துள்ளதால் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் புதிதாக 27 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 27 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, இவர்கள் வசித்து வரும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே எங்கும் செல்லாதவாறும், அதுபோல் வெளிநபர்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழையாமல் இருக்கவும் அங்குள்ள பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 8 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.